Quantcast
Channel: சந்தித்ததும் சிந்தித்ததும்
Viewing all 2964 articles
Browse latest View live

மாயா – சுஜாதா

0
0



கருங்கல் சுவர் ஆள் உயரம் இருந்தது. வாசலில் காவற்காரன் என் காரை நிறுத்தினான்.  என் பெயர் கேட்டான். கணேஷ்’ என்றேன். உடனே கதவைத் திறந்து என்னை அனுமதித்தான். காத்திருக்கிறார்கள் எனக்காக. திறந்த கதவின் கம்பிகளுக்கு நடுவில் ஆங்கில கே. எம். எழுத்துக்கள் சமீபத்திய ப்ராஸ்ஸோவில் பளபளத்தன. கிருஷ்ணா மிஷன் உலக அமைதி’ என்று அதன் கீழ் எழுதியிருந்த்து. உள்ளே அந்தக் கட்டடத்தை அடையும் பாதை கவிதையுடன் நெளிந்தது. இருபுறமும் வரிசையாக குல்மோஹர், டாலியா, ஸெஸ்பானியா பூக்கள், கொடிகள், வர்ணங்கள், பச்சைப் புல் சதுர கஜங்கள்.


வெண்மையான கட்டடம். தந்தம் போல் மெலிதான, மஞ்சள் கலந்த, பளபளக்கும் வெண்மை. வெள்ளையடித்தவனை விசாரிக்க வேண்டும். கில்லாடி வேலை வாத்யாரே!’.


போர்ட்டிகோவில் என் கறுப்பு கார் உறுத்தி இருக்கும். எனக்காக அந்த மாது காத்திருந்தாள். நீங்கள் பத்து நிமிடம் லேட்’ என்றாள். நான் கதவைத் திறந்து என் தாமதத்தைப் புன்னகையில் மறைத்தேன். பின் குறிப்பாக, ‘ஸாரி’ என்றேன். அம்மாள் வெண்மை சாகரமாக இருந்தாள். அவளுக்கு வயது நாற்பத்து எட்டு இருக்கலாம். லேசாக மீசை இருந்தது. கண்களில் கண்ணாடி வட்டங்கள்தலையில் நரை என்பதே இல்லை. விஸ்தாரமாக இருந்தாள்.


இப்படித்தான் விறுவிறுப்பாக ஆரம்பித்தது வாத்யாரின்’ மாயா என்ற சிறுகதை. நாகப்பட்டினம் குமரிப் பதிப்பகம்’ வெளியிட்ட மாயா’ என்ற சிறுகதைத் தொகுப்பின் ஐந்தாம் பதிப்பு [1994] அப்போதைய விலை ரூபாய் 19! [பத்தொன்பது ரூபாய் மட்டுமே!]. மாயா கதைச் சுருக்கத்தினைப் பார்ப்போமா?


கிருஷ்ணா மிஷன் என்பது சுவாமி கிருஷ்ணானந்த சன்மார்க்க பதா என்கிற சிக்கலான பெயரால், ‘சுவாமி’ என்று சுருக்கமாக அழைக்கப்படும் மகானின் தலைமையில் நடத்தப்படும், பணம் படைத்த ஒரு இயக்கம்.  அவர்கள் நடத்தும் கல்லூரிகள், ஆராய்ச்சிக் கழகங்கள், அனாதை இல்லங்கள், புனர் வாழ்வு இல்லங்கள் ஆகியவை கணக்கிலடங்கா.


சுவாமி மீதும், அந்த மிஷன் மீதும் மாயா எனும் பெண் தந்த புகார் என்ன என்று தானே கேட்கிறீர்கள்? இதையே தான் கணேஷும் கேட்டார். 


சென்ற செப்டம்பர் மாதம் பதினெட்டாம் தேதி என்னை மிஷனில் நடக்கும் ஹேலஜ்ர பூஜையில் கன்னிகைப் பெண்ணாக அழைத்தார்கள்.  நான் அங்கே சென்ற போது என்னை சுவாமி பலாத்காரம் செய்து விட்டார். [இங்கே தந்திருப்பது சுருக்கம் மட்டுமே! முழுப் புகார் படிக்க மாயா புத்தகத்தினைப் படிக்கலாமே!]


கணேஷ் இந்தப் புகாரினைப் படித்து சில விசாரணைகள் செய்து புகார் கொடுத்த மாயாவினையும், அவளது அண்ணனையும் சந்திக்கிறார்.  அங்கேயும் சில விவரங்கள் சேகரித்துக் கொண்டு அலுவலகத்திற்குத் திரும்பி வசந்திடம் இந்த கேஸ் பற்றிய விவரங்களைச் சொல்கிறார். 


வாத்தியாரின் கணேஷ் வசந்த் வந்துவிட்டால் கதையில் விறுவிறுப்புக்கா பஞ்சம். காட்சிகள் விறுவிறுப்பாக மாறுகின்றன.  விசாரணை, மாயா, மிஷன், கோர்ட் என்று படிப்படியாக மாறும் காட்சியில் கணேஷ்-ன் திறமையான வாதத்தினால் சுவாமி மீது சுமத்தப்பட்ட பழி பொய் என்று நிரூபிக்கப்படுகிறது.  இதோடு நிறுத்தி இருந்தால் அது சாதாரணமான கதை.  இதற்குப் பின் ஒரு ட்விஸ்ட் வைத்தால் தானே அது வாத்யாரின் கதையாக முடியும்.


வெற்றிக்குப் பிறகு மிஷன் சென்று சுவாமி தன் கையை ஒரு சுற்றுச் சுற்றிக் கொடுத்த ஒரு சிறிய தங்க கிருஷ்ணன் விக்ரஹத்தினை வாங்கிக் கொண்டு காரில் திரும்பும்போது கணேஷ் தன்னுடைய கைப்பெட்டியை மிஷன் அறையிலேயே விட்டு வந்தது தெரிகிறது. மீண்டும் மிஷனிற்குச் சென்று அதை எடுக்கும் போது... 


என்ன நடந்தது என்பதை கதையை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்! :) ஐம்பது பக்கங்களுக்கு மேல் இருக்கும் இந்த கதையில் வாத்தியாரின் முத்திரைகள் ஏராளம்.


சுவாரசியமான இந்த சிறுகதைத் தொகுப்பில் இன்னும் நான்கு கதைகள் இடம் பெற்றுள்ளன. அவை அஸ்திவாரம், குணம், மந்திரவாதி மற்றும் பொய்கள்.  உங்களுக்கு மாயா கதையின் முடிவு என்னவென்று தெரிந்து கொள்ள எத்தனை ஆவலோ அதே அளவு ஆவல் எனக்கும் பொய்கள்’ கதையின் முடிவு என்ன என்று தெரிந்து கொள்ள ஆனால் பைண்ட் செய்து வைக்கப்பட்ட அந்த சிறுகதைத் தொகுப்பின் கடைசி பக்கங்களை யாரோ ஸ்வாஹா செய்து விட்டார்கள்!


மீண்டும் வேறொரு பகிர்வுடன் சந்திக்கும் வரை...


நட்புடன்


வெங்கட்.

புது தில்லி. 


பின் குறிப்பு:  பதிவிற்கான படம் நண்பர் திரு பாலஹனுமான் அவர்களின் தளத்திலிருந்து எடுக்கப்பட்டது.  அவருக்கு எனது மனமார்ந்த நன்றி.


அக்பர் கட்டிய அலகாபாத் கோட்டை

0
0

திரிவேணி சங்கமம் – காசி பயணம் – பகுதி - 10

இப்பயணத்தொடரின் முந்தைய பகுதிகள்பகுதி 1 2 3 4  5 6 789


படகுப் பயணம் முடிந்து கரை சேர்ந்தோம். அப்துல் கலாம் பான் பராக் துணையோடு நேரத்தினைக் கழித்துக் கொண்டிருந்தார். “அடுத்தது எங்கே?என்ற கேள்விக்கு முதலில் கோட்டையையும், அதன் உள்ளே இருக்கும் பாதாள்புரி மந்திர்மற்றும் அக்‌ஷய் வட் பார்த்து விட்டு வந்து விடுங்கள் – நான் இங்கேயே காத்திருக்கிறேன் என்றார். 




சங்கமத்திலிருந்து அருகிலேயே யமுனை நதியோரம் தான் அக்பர் தனது ராஜ்ஜியத்தினைக் காக்க கோட்டை கட்டத் தீர்மானித்த இடம்.  1583 – ஆம் வருடம் அக்பர் இந்தக் கோட்டையினைக் கட்டினார் என வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன. மிகச் சிறப்பாகக் கட்டப்பட்டுள்ள இந்தக் கோட்டையின் உள்ளே பார்க்கவேண்டிய சில அற்புதமான விஷயங்கள் உள்ளன.


யமுனை ஆற்றிலிருந்து பார்க்கும்போது கம்பீரமாகத் தோற்றமளிக்கும் இக்கோட்டை தற்போது இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.  ராணுவம் என்றாலே ரகசியம் தானே! அதனால் கோட்டையின் பல பகுதிகளைப் பார்க்க பொதுமக்களுக்கு அனுமதியில்லை.  இரண்டு மூன்று இடங்கள் மட்டுமே பொதுமக்கள் பார்வைக்கு திறந்திருக்கிறார்கள்.  கோட்டைக்குள் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் அசோகர் எழுப்பிய ஸ்தூபம் ஒன்றும் [தற்போதைய கௌஷம்பி பகுதியில் எடுத்து வரப்பட்டதாக சொல்லப்படுகிறது], சரஸ்வதி குண்ட் என்றழைக்கப்படும் சரஸ்வதி நதியின் பிறப்பிடமும், ஜோதாபாய் அரணமணையும் இருக்கிறது.  அசோகர் காலத்து தூணில் ஹுவான் சுவாங், பீர்பல், போன்ற பிரபலமானவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்கிறது. 




இந்த இடங்களைப் பார்ப்பதற்கு அனுமதிக் கடிதம் பெற வேண்டும். அனுமதிக் கடிதம் பெற்றால் இவ்விடங்களை சுலபமாகப் பார்க்க முடியும்.  எல்லோரும் பார்க்க அனுமதிக்கப்பட்ட இடங்கள் இரண்டு – அவை கோட்டையினுள் இருக்கும் பாதாள்புரி கோவில் மற்றும் அக்‌ஷய்வட் என்று அழைக்கப்படும் ஒரு இறப்பே இல்லாத மரம்.  பாதாள் புரி கோவில் பூமிக்குள் அமைக்கப்பட்டு இருக்கிறது.  ஐந்து ரூபாய் நுழைவுக் கட்டணம் செலுத்தி கீழே இறங்கிச் சென்றால், நிறைய சன்னதிகள் இருக்கின்றன.  ஒவ்வொன்றாய் பார்த்தவண்ணம் நீங்கள் வெளியே வந்து விடலாம்.  அக்‌ஷய் வட் மரத்தினையும் நீங்கள் பார்க்கலாம்.


நாங்கள் சென்றபோது தமிழகத்தின் வேலூர் மாவட்டத்திலிருந்து சில பயணிகள் சுற்றுலாவாக வந்திருந்தார்கள்.  அவர்களுடன் பேசியதில் ஒரு குழுவாக வந்திருப்பது தெரிந்தது.  தமிழகத்திலிருந்து பேருந்திலேயே வந்திருப்பதாகவும் – வடக்கில் நிறைய இடங்களைப் பார்த்து விட்டு – மொத்தம் 20 நாட்கள் தொடர்ப் பயணம் செய்யப்போவதாகவும் சொன்னார்கள்.  கிட்டத்தட்ட ஐம்பது பேர் கொண்ட குழு.  அவர்கள் வந்திருந்த பேருந்தின் கண்ணாடியில் மிகவும் பொருத்தமாகத்தான் எழுதி இருந்தது! – உலகம் சுற்றும் வாலிபன்”!  






கோட்டையின் வெளிச்சுவர்களில் பல மரங்கள் முளைத்து வேர்கள் வெளியே தெரிகின்றன.  அப்படிச் சிலவற்றை புகைப்படங்கள் எடுத்தோம்!  கோட்டை பராமரிக்கப்பட்டால் நன்றாக இருக்கும்.  அக்பர் காலத்தில் கட்டிய கோட்டைகளிலேயே இது தான் மிகப் பெரியதும், சிறப்பானதும் என்று சொல்கிறார்கள்.  அழிந்து வரும் பல புராதனச் சின்ன்ங்களில் இதுவும் ஒன்று என நினைக்கும்போது வருத்தம் தான் மிஞ்சும். 





கோட்டையிலிருந்து வெளியே வரும்போது பலவிதமான மக்களைச் சந்திக்கலாம். படகுக் காரர்கள், சில்லறை வியாபாரிகள், சங்கமத்திலிருந்து உங்களை நகரத்திற்கு அழைத்துச் செல்லக் காத்திருக்கும் ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள், கையில் குழந்தைகளை வைத்துக் கொண்டு யாசகம் கேட்கும் பெண்கள், நீண்ட தாடியும், ஜடாமுடியும் வைத்திருக்கும் சாமியார்கள், இவற்றையெல்லாம் புகைப்படம் எடுத்து தனது நாட்டில் சென்று “See this…  Poor Indiansஎன்று காண்பிக்கப்போகும் வெள்ளைக்காரர்கள்  என பலதரப்பட்ட மக்களையும் பார்த்தபடியே வெளியே வரலாம். 




சில நாட்களுக்கு முன் ஒரு ஞாயிறன்று நாளைய பாரதம்என்ற தலைப்பில் வெளியிட்ட புகைப்படங்களில் ஒன்று இங்கே தான் எடுத்தேன்.   பலரை சிந்திக்க வைத்த அப்புகைப்படம் கையில் பாம்புடன் இருக்கும் ஒரு சிறுவன் படம். பாம்பினை அனாயாசமாக கையில் பிடித்துக் கொண்டு இருக்கும் சிறுவனிடம் உனக்குப் படிக்க ஆசையில்லையா, இப்படி சிறுவயதிலேயே பாம்பினை எடுத்துக்கொண்டு வந்துவிட்டாயே?என்று கேட்டேன்.  எங்க தாத்தா, அப்பா என அனைவருமே இப்படித்தான் பிழைத்தார்கள், நான் மட்டும் படித்து என்ன செய்யப் போகிறேன், காசு கொடுத்தால் கொடு, இல்லையெனில் ஆளை விடு, அங்கே வண்டியில் ஒரு வெள்ளைக்காரக் குடும்பம் வருகிறது, நான் போகணும்!என்றான்.


இப்படியாக கோட்டையையும் அதனுள் இருக்கும் சில புராதனமான இடங்களையும் கண்டுகொண்டு எங்கள் வாகனத்தினைத் தஞ்சமடைந்தோம்!  பயணத்தின் அடுத்த இலக்கை நோக்கிச் செல்வோமா? 


மீண்டும் அடுத்த பயணப் பகிர்வில் சந்திக்கும்வரை.....


நட்புடன்


வெங்கட்.

புது தில்லி. 

ஃப்ரூட் சாலட் – 20: – பொது இடத்தில் அசுத்தம் செய்தால்....

0
0

இந்தவாரசெய்தி: 

ராஜஸ்தான் மாநிலத்தில் ஜுன்ஜுனூ என்று ஒரு இடம் இருக்கிறது.  அங்கே உள்ள மாவட்ட மன்றம் பொது இடத்தில் சிறுநீர்/மலம் கழிப்பதைத் தடுக்க புதிய ஏற்பாடுகள் செய்திருக்கின்றார்கள். ஆத்திர அவசரத்திற்கு யாரேனும் பொது இடங்களில் இயற்கை உபாதைகளைத் தீர்த்துக் கொண்டால், அவர்களுக்குப் பின் திடீரென சிலர் தோன்றி விசில் ஊதுவது மட்டுமல்லாது மேளம் கொட்டுவார்களாம்!  அது மட்டுமல்லாது கிராமத்தில் ஒலிபெருக்கிகள் மூலம் அவர்களது பெயரைச் சொல்லி இன்னார் இந்த இடத்தில் இப்படி அசிங்கம் செய்தார் என்று விளம்பரப் படுத்தப் போகிறார்களாம்.




மாவட்டத்தின் 34 பஞ்சாயத்துகளில் தற்போது இத்திட்டம் அமுலுக்கு வந்திருக்கிறது.  இந்த முயற்சி வெற்றி அடைந்தால் மாவட்டம் முழுவதும் இப்படி விசில் அடிக்கப் போகிறார்களாம். கிராமங்களில் பொது கழிப்பிடம் கட்டவும், அதைப் பயன்படுத்த மக்களுக்கு அறிவுறுத்தவும் செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார்கள்.  மாவட்டம் முழுவதும் 10000 வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின் வீடுகளில் கழிப்பறை கட்டவும் திட்டம் செய்துள்ளார்கள்.  ஒரு கழிப்பறை கட்ட 9000/- செலவு ஆகும் எனக் கணக்கிட்டுள்ளார்கள். 


பல இடங்களில் கழிப்பறை வசதி இல்லை. இருந்தாலும் சுத்தமாக இருப்பதில்லை.  கழிப்பறை வசதி பொறுத்தவரை இந்தியா முழுவதுமே இந்நிலை தான்.  நிச்சயம் மாற்றம் தேவை தான்.


இந்தவாரமுகப்புத்தகஇற்றை:


குறிஞ்சி – மலையும் மலை சார்ந்த இடமும்

முல்லை – காடும் காடு சார்ந்த இடமும்

மருதம் – வயலும் வயல் சார்ந்த இடமும்

நெய்தல் – மணலும் மணல் சார்ந்த இடமும்



*

*

*

*

*

தமிழகம் – இருளும் இருள் சார்ந்த இடமும்...  

இந்தவாரகுறுஞ்செய்தி


Do you know the relation between your two eyes? They blink together, move together, cry together, see things together and sleep together though they never see each other, Friendship should be just like that.  Life is hell without friends.



ரசித்த புகைப்படம்:  என்ன ஒருசுகமான தூக்கம் :)




ரசித்த பாடல்எனது மற்றொரு வலைப்பூவான ரசித்த பாடலில்அவ்வப்போது நாங்கள் ரசித்த பாடலை பகிர்ந்து கொள்வது வழக்கம்.  சில மாதங்களாக, என்னால் அதில் பாடல்களை பகிர்ந்து கொள்ள முடிவதில்லை.  அதனால், ரசித்த பாடலில் சிலவற்றை வாரம் ஒன்றாக இங்கே தர நினைத்திருக்கிறேன்.  இன்று முதல் பாடலாய், பாடும் நிலா பாலுவின் பயணங்கள் முடிவதில்லை பட்த்திலிருந்து “இளைய நிலா பொழிகிறதே....பாடல் இதோ நீங்களும் கேட்டு ரசிக்க.





ராஜா காது கழுதைக் காது


நேற்று வீட்டின் அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்திருந்தேன் – அட பேருந்துக்காகத் தான் காத்திருந்தேன். அங்கே பள்ளி செல்லும் ஒரு மாணவனும் மாணவியும் அமர்ந்திருந்தனர்.  அந்த மாணவன் மாணவியிடம் சொல்வதைக் கேட்டபோது “திக்கென்றிருந்தது – ‘கொஞ்ச நாள் ஒரு பெண்ணை டாவடிச்சுட்டு இருந்தேன், எனக்கு செட்டாகிடும்னு நினைச்சேன், பார்த்தா வேறொருத்தனுக்கு செட்டாகிடுச்சு!, சரி போனா போகுது என்று வேறொரு பெண்ணை டாவடிக்க ஆரம்பிச்சுட்டேன்!”   என்னத்த சொல்ல! 


படித்ததில் பிடித்தது:


வரைபடம்



வாசலில் வந்துநின்று கெஞ்சிய

விற்பனைப் பெண்ணிடம்

வாங்கியது அந்த உலக வரைபடம்.

படுக்கையறைத் தலை மாட்டில்

தொங்கவிடப்பட்ட அதைப் பார்த்து

‘நம் ஊர் எங்கேஎன்றாள்.

‘நம் வீடு இருக்கும் இடம் எது

என்பதற்கும் வரைபடத்தில் புள்ளியில்லை.

அவள் பள்ளிக் கூடம்,

அவள் சினேகிதி சுலேகா வீடு பற்றி

மேற்கொண்டு என்னிடம் கேட்பதில்

பயனில்லை என்ற முகக் குறிப்புடன்

குதித்துக் கொண்டே விளையாடப் போனாள்.

இந்தக் கண்டம் அந்தக் கண்டம்

எதிலாவது

வாசலில் வந்து விற்ற பெண்ணின்

ஆதரவற்ற முகமோ, விடுதியோ

தெரிகிறதா என்று உற்றுப் பார்க்கத்

துவங்கினேன் அப்புறம்.


-கல்யாண் ஜி



மீண்டும்ஃப்ரூட்சாலட்-உடன்அடுத்தவெள்ளியன்றுசந்திக்கும்வரை

நட்புடன்

வெங்கட்.
புதுதில்லி.



சொல்லுங்கண்ணே சொல்லுங்க!

0
0

க்ர்ர்ர்ர்ர்... க்ர்ர்ர்ர்ர்....

அட என்ன சத்தம்பா இது?


என்னோட குறட்டை சத்தம் தான். என் குறட்டை சத்தம் எனக்கே எப்படி தெரியும்னு கேட்காதீங்க!


“டுடுடிங்ங்... டுடுடிங்ங்.... டுடுடிங்ங்..... டுடுடிங்ங். டுடுடிங்ங். “


அடுத்து இது என்ன சத்தம்?

இந்த சத்தம் என்னோட அலைபேசியிலிருந்து வந்த சத்தம்.


ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த நான் தலைமாட்டில் இருந்த அலைபேசியை தட்டுத் தடுமாறி எடுத்துப் பார்த்தால் Sripathi Calling”என்று வந்தது. பேசுவதற்கான விசையை அழுத்தி,


‘சொல்லுங்கண்ணே சொல்லுங்க!என்றேன்.


எதிர் புறத்தில் முதலில் சொன்ன அதே கிர்ர்ர்ர்ர்....  சத்தம்! இது அவருடைய குறட்டை சத்தம்.




திரும்பவும் இமான் அண்ணாச்சி போல, சொல்லுங்கண்ணே...சொல்ல, அங்கிருந்து, The person has put you on hold. Please hold the line or call again later”என்றாள்ஏர்டெல் பெண் காந்தக் குரலில்.


சில நொடிகள் காத்திருந்த பின், அழைப்பினை துண்டித்து, நேரம் பார்த்தேன்.  நள்ளிரவும், அதிகாலையும் இல்லாது 03.19! என்றது கடிகாரம்.  “என்னது, இந்த நேரத்துல அழைக்கிறாரேஎன்ற எண்ணத்துடனே இருந்த போது மீண்டும் அழைப்பு. எடுத்தால், திரும்பவும் The person has put you on hold. Please hold the line or call again later”எனும் காந்தக் குரல்.  இந்நேரத்தில் அழைக்கிறாரே,  என்ன பிரச்சனை தெரியவில்லையேஎன நானே அழைத்தால், இம்முறை, காந்தக் குரல்காரி The person you have called is busy. Please hold the line or call again later”என்றாள்.


ஒன்றல்ல, இரண்டல்ல, இப்படியே எட்டு முறை அழைப்பு வரவே, வேறு வழியின்றி, அவர்கள் இல்லத்தின் தொலைபேசியில் அழைத்தேன். நண்பரின் மனைவி, பாதி தூக்கத்திலேயே, “என்னப்பா, என்ன விஷயம், இந்த நேரத்துல ஃபோன்?என்று கேட்க, அண்ணாச்சி மொபைல் எங்கே?, அதுலேருந்து தொடர்ந்து அழைப்பு வருது!என்று சொல்ல, “ஓ கையில வைச்சுக்கிட்டே தூங்கறார், நான் எடுத்துடறேன்என்று சொல்லி, ஒரு “சாரியும் சொல்லி வைத்தார்.


இங்கே ஒரு Flashback சொல்ல வேண்டியிருக்கிறது.  Flashback என்றவுடன் ரொம்ப பின்னாடி போயிடாதீங்க, சுவத்துல முட்டிப்பீங்க! நேற்றிரவு பத்தரை மணிக்கு ‘நித்திரா தேவிஅழைக்க அப்போது தான் படுத்து கண் அயர்ந்தேன்.  தூக்கத்தினைக் கலைத்து, அலைபேசி அடிக்க, Sripathi Calling”  என்று வந்தது. எடுத்தால், “என்ன அதுக்குள்ளே தூங்கியாச்சா?என்று கேட்டு சில விஷயங்கள் பேசிய பின் படுத்து உறங்கினேன். 


இரவு உறங்கு முன் கடைசியாக பேசியது என்னுடன் என்பதால், அவர் தூங்கும்போது மேலே சொன்ன விஷய[ம]ங்கள் நடந்திருக்கிறது.  அவரது அலைபேசியில் Auto Keygaurd Off செய்து வைத்திருக்கிறார். தூங்கும்போது கூட கையிலே அலைபேசியை வைத்துக்கொண்டே இருந்து, “Call” விசையை அழுத்தி அழுத்தி என்னை எழுப்பி விட்டார்!  சாதாரணமாகவே அவருக்கு நிறைய அழைப்புகள் வரும்.  அதுக்குன்னு தூங்கும்போதும் வரும்னு கையிலேயே அலைபேசியை வைத்திருப்பது கொஞ்சம்... இல்லை இல்லை ரொம்பவே ஓவர்! 


அவர் தூங்கிக் கொண்டு இருக்க, நான் சிறிது நேரம் தூங்க முயற்சித்து, தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே, அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமேஎன்று பாட எஸ். ஜானகி அருகில் இல்லாததால், எழுந்து, பல் துலக்கி, ஒரு தேநீர் பருகி, கணினி முன் அமர்ந்து இப்பதிவினை தட்டச்சுகிறேன்!


அவர் செய்த இத் திருவிளையாடல் அவருக்கே தெரியுமா என விடிந்த பிறகு தான் கேட்க வேண்டும் “சொல்லுங்கண்ணே, சொல்லுங்க!


மீண்டும் வேறொரு பதிவுடன் சந்திக்கும் வரை....


நட்புடன்


வெங்கட்

புது தில்லி.


டிஸ்கி:  தலைப்பைப் பார்த்து, ஆதித்யா டி.வி.யில் வரும் “சொல்லுங்கண்ணே, சொல்லுங்க!நிகழ்ச்சி பற்றி தான் நான் ஏதோ எழுதி இருக்கேன் என்ற நினைப்பில் வந்தவர்களுக்கு, அதைப் பற்றியும் எழுதிட்டா போச்சு!”.... 


குரங்கு அருவி

0
0


புத்தாண்டு – 2009 – சரி எங்கேயாவது போகலாமென நினைத்துச் சென்ற இடம் – கோவை – பொள்ளாச்சி அருகே இருக்கும் குரங்கு நீர்வீழ்ச்சி மற்றும் ஆழியார் அணை.  கல்லூரியில் படித்த போது சக மாணவ/மாணவியர்களோடு சென்ற இடம்.  இப்போது சென்றது மனைவி, மகள் மற்றும் இரண்டு நண்பர்களோடு. இன்றைய புகைப்படங்களாக நான் எடுத்த சில படங்களை உங்கள் ரசனைக்காய் பகிர்ந்திருக்கிறேன்.
 


மலைமேல் பிறந்து பாறைகள் மேல் தவழ்ந்து அருவியாக உருவெடுக்கும் இதன் அழகை என்ன சொல்ல!



பாறைகளைத் தழுவும் தண்ணீர் – மற்றொரு நீர்க்கோலம்!


என்ன அழகு.  சற்றே நெருங்கி, பாறை மேல் குரங்கு போல் தாவ ஆசை. ஆனால்..  வாலைச் சுருட்டிக்கொண்டு zoom செய்து தண்ணீரை படம் பிடித்தேன்!


இது என்ன பனிக்கட்டியா எனக் கேட்டால், இல்லை என்பேன் – தண்ணீர் விழும் இடத்தினை படம்பிடித்தால் பனிக்கட்டி போல் தெரிகிறதே!


அதெல்லாம் சரி, குரங்கு நீர்வீழ்ச்சிஎனத் தலைப்பில் சொல்லிவிட்டு குரங்கையே காண்பிக்கலையே என்று ஏக்கத்துடன் பார்ப்பவர்களுக்காகவே ஒரு குரங்கு படம்! நாங்கள் அருவியின் அழகில் நனைந்து திரும்பும்போது எங்கள் வண்டியின் மேல் அமர்ந்திருந்தார் திருவாளர் குரங்கார். 


அடுத்து செய்தது – Antena-வை பிடித்து கடித்து ருசி பார்த்தார்! அதானே இப்படி ஏதாவது விஷமம் செய்தால் தானே நமது பெருமையை உலகுக்குப் பறை சாற்ற முடியும்!  நீ கடிடா ராசா....

என்ன நண்பர்களே, குரங்கு அருவியை ரசித்தீர்களா?  அடுத்த வாரம் ஞாயிறன்று வேறு சில படங்களோடு உங்களைச் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

தீப ஒளி பரவட்டும்!

0
0

அன்பு நண்பர்களுக்கு,



அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.என்றென்றும் மகிழ்வோடு இருக்க எனது பிரார்த்தனைகள். 


புன்சிரிப்போடு இந்நாளை கொண்டாடுவோம்!  சொன்னால் மட்டும் போதுமா – சிரிக்க வைக்க ஒரு தீபாவளி சிறப்பு நகைச்சுவை.








படங்களும், நகைச்சுவையும் 1949 - ஆம் வருட ஆனந்த விகடன் தீபாவளி மலரில் வெளி வந்தவை.  நன்றி ஆ.வி.



ஸ்வீட் எடுங்க! கொண்டாடுங்க!


நட்புடன்


வெங்கட்



இரவைப் பருகும் பறவை – லாவண்யா சுந்தரராஜன்

0
0




ஃப்ரூட் சாலட் பதிவொன்றில் படித்ததில் பிடித்தது” பகுதியில் சக தில்லி வலைப்பதிவர் திருமதி லாவண்யா சுந்தரராஜன் அவர்களுடைய வடு” என்ற தலைப்பிட்ட கவிதையை சமீபத்தில் பகிர்ந்திருந்தேன்.  இது லாவண்யா அவர்கள் வெளியிட்ட இரண்டாம் கவிதைத் தொகுப்பான இரவைப் பருகும் பறவையிலிருந்து எடுக்கப்பட்டது.  சென்ற வருட தில்லி புத்தகச் சந்தையில் வாங்கியிருந்தாலும் படிக்காது வைத்திருந்த புத்தகங்கள் பலவற்றில் இதுவும் ஒன்று. 


சமீபத்தில் காலை நேரத்தில் கூவும் புள்ளினங்களின் குரல் கேட்டு  சீக்கிரமே விழிப்பு வந்து விட, துயிலெழுந்து காலைக் கடன்கள் முடித்து பலகணியில் நிற்கையில் சில்லென்ற காற்று பலகணி ஜன்னல் மூலம் முகத்தில் பட,  அலமாரியிலிருந்த புத்தகங்களைப் பார்வையிட்டேன்.  “என்னைப்படியேன் என்று இரவைப் பருகும் பறவை” அழைக்க, கவிதை படிக்க சரியான நேரம் இது தான் எனப் படிக்கத் தொடங்கி புத்தகத்தில் வெளியிட்டுள்ள அறுபதுக்கும் மேற்பட்ட கவிதைகளையும் படித்து முடித்த பின்தான் கீழே வைத்தேன்.  அன்று அலுவலகத்துக்கு  சற்றே தாமதமாகத்தான் சென்றேன். அரை நாள் விடுமுறை கொடுக்க வேண்டியதாயிற்று! இருந்தாலும், நல்ல கவிதைத் தொகுப்பினைப் படித்த திருப்தி கிடைத்ததே! 


புத்தகத்தில் வெளியிட்டுள்ள எல்லாக் கவிதைகளும் பிடித்திருந்தாலும், “வடுஉதிர்ப் பிரியம்”, மழை சென்றபின்னே”, “துயரத்தின் மரம்”, “ஏமாற்றம்” “உருகும் பனிக்கட்டி”, “புதுப் பெண்” போன்ற கவிதைகள் மிகவும் பிடித்திருந்தது.  நான் ரசித்த கவிதைகளில் ஒன்றிரண்டை இங்கே தருகிறேன்.


புதுப் பெண்


வீடு புதிது

உறவுகள் புதிது

கிண்டல் புதிது

திண்டல் புதிதென

புதுமணப்பெண்

மங்கல ஓசைகளில் இருந்து விடுபடாமல்

திளைத்திருக்கிறாள்


யாரும் எழுமுன்

சாணம் கரைத்து போட்டு

வாசல் பெருக்கணும்


நாத்தனாரின் கட்டளை கேட்டு

திடுக்கிட்டு அடங்கி

பழம்பெண்ணாகிறாள்


ஏமாற்றம்


அம்மாயி வீட்டு வாசல்

சாணம் மணக்கும்

மாக்கோலம் போடுவாங்க


பின்ன அவங்க வாசல்

சிமெண்ட் ஆச்சு

மாமாலு கோலமாவுலதான்

கோலம் போடுவாங்க


இப்போ மாமாலு மருமக

பெயிண்ட் அடிச்சு

வாசலில் நிரந்தரமா

கோலம் போட்டு இருக்கா


பெயிண்ட் கோலம் முகர்ந்த

எறும்பு கொஞ்சம் தடுமாறி

வாசல் தாண்டி

சமையலறை சக்கரை டப்பா

தேடி வந்துச்சி


என்ன நண்பர்களே ஃப்ரூட் சாலட்-ல் கொடுத்த வடு கவிதையையும் இங்கே கொடுத்த இரண்டு கவிதைகளையும் ரசிச்சீங்களா? மீதிக் கவிதைகளையும் நீங்க படிக்கலாம். லாவண்யா சுந்தரராஜன் அவர்களின் இரண்டாம் கவிதைத் தொகுப்பினை "காலச்சுவடு" பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.  புத்தகத்தின் விலை ரூபாய் 80. 


மீண்டும் வேறொரு புத்தக வாசிப்பனுபவத்துடன் உங்களைச் சந்திக்கும் வரை...


நட்புடன்


வெங்கட்.

புது தில்லி.


ஃப்ரூட் சாலட் – 21: – குழந்தைகள் தினம்/உலக நீரிழிவு தினம் – வாயில் புடவை

0
0

இந்தவாரசெய்தி: 

Eshaan Shevate எனும் சிறுவனுக்கு Type 1 நீரிழிவு நோய் இருக்கிறது கண்டுபிடிக்கப்பட்ட போது அவனுக்கு வயது 14. நோய் வந்ததற்குக் கூட கவலைப்படவில்லை சிறுவன். ஆனால் அவனால் ஒரு வருடத்திற்கு நீந்த முடியாது என்பதைத் தான் அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லையாம்.




ஐந்து வயது முதல் நீச்சல் கற்றுக்கொண்டு பல போட்டிகளில் வென்று பதக்கங்கள் பெற்ற சிறுவன் ஏழாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது உடல் நிலை சரியில்லாது போய்விட்டது. என்ன ஏது என புரியாது மருத்துவர்களைச் சந்தித்து, பரிசோதனைகளுக்குப் பிறகு, சிறுவனுக்கு நீரிழிவு நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட, சிறுவனுக்கும் பெற்றோர்களுக்கும் பலத்த அதிர்ச்சி.


குழந்தையாக இருக்கும்போது வைரஸ்களால் கணையங்கள் தாக்கப்பட்டு பல சிறுவர்களுக்கு நீரிழிவு நோய் உண்டாகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். நாள் ஒன்றுக்கு நான்கு முறை இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறதாம்.


Eshaan Shevate, ஒரு வருட ஓய்வுக்குப் பிறகு சிறிது சிறிதாக பயிற்சியில் ஈடுபட்டு, இப்போது மாநில அளவிலான நீச்சல் போட்டிகளில் கலந்து வெற்றி பெற ஆரம்பித்து இருக்கிறாராம். மன உறுதியோடு நீரிழிவு நோயை எதிர்த்து போராடி வெற்றி பெற்று வரும் இச்சிறுவனுக்கு Diabetes Care and Research Foundation நிறுவனம் பரிசு அளிக்க இருக்கிறார்கள்.


அவரது விடாமுயற்சிக்கும் தன்னம்பிக்கைக்கும் ஒரு பூங்கொத்து!


இந்தவாரமுகப்புத்தகஇற்றை:


தேவைக்கு மேலே பொருளும், திறமைக்கு மேலே புகழும் கிடைத்துவிட்டால் பார்வையில் படுவதெல்லாம் சாதாரணமாகத்தான் தோன்றும்.


இந்தவாரகுறுஞ்செய்தி



நட்பு என்பது கைக்கும்கண்களுக்கும் உள்ள உறவைப் போல இருக்க வேண்டும் – கையில் அடிபட்டால் கண்கள் அழும்.  கண்கள் அழுதால் கைகள் துடைக்கும்!


ரசித்த புகைப்படம்:  இவர்களின் அன்பை என்னவென்று சொல்ல!




ரசித்த பாடல்:  ”சொல்லாயோ வாய்திறந்து” மோகமுள் படத்திலிருந்து. சிறப்பான இப்பாடலை இந்த வாரத்தின் ரசித்த பாடலாய் பகிர்ந்திருக்கிறேன் நீங்களும் ரசிக்க!






ராஜா காது கழுதைக் காது


தில்லியிலிருந்து திருச்சி வந்து கொண்டிருந்தபோது ரயிலில் ஒரு புதுமணத் தம்பதியும் எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தனர். பயணத்தின் போது ஒரு வயதான பெண்மணி “Brainvita” மற்றும் சில விளையாட்டுப் பொருட்கள் விற்றபடி வர, நேரத்தினைப் போக்க, அந்தப் பெண் “Brainvita” வாங்கி விளையாட ஆரம்பித்தார்.”ஒரு கோலிகுண்டு மட்டுமே மீதமிருந்தால் வெற்றி பெற்றதாக ஆகும்” எனச் சொல்லி விளையாடி, அப்படி வெற்றி பெற்றால், அப்பெண்ணின் கணவர் 100 ரூபாய் தரவேண்டும் என அவர்களுக்குள் பந்தயம்.  பெண் விளையாடி வெற்றி பெற, கணவரிடம் பணம் கேட்டபோது, “நீ போங்கு ஆட்டம் ஆடறே” என மறுக்க, அப்பெண் சொன்னது – “நம்புப்பா! நான் சரியாதான் ஆடினேன். நம்பிக்கைதான் Life-ஏ!”


படித்ததில் பிடித்தது:


ஒரு நண்பரின் வீட்டிற்குக் கி.வா.ஜ. சென்றாராம். நண்பர் ஒரு அடுக்குமாடியில் குடியிருந்தார். புடவை உலர்த்துவதற்கு வெய்யில் படுகிற வகையில் வசதியான இடம் அந்த வீட்டில் இருக்கவில்லை. வாசல் பக்கத்தில் தான் வெய்யில் அடித்துக் கொண்டிருந்தது.


நண்பரின் மனைவி வாசல் கதவைத் திறந்து வைத்து வெய்யில் படும்படியாகத் துவைத்த புடவையை அதன் மேல் காயப் போட்டிருந்தார். புடவையைப் பார்த்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்த கி.வா.ஜ., “இது என்ன புடவை தெரியுமா?” என்று நண்பரைக் கேட்டார். “ஏன் சாதாரணப் புடவைதானே?” என்றார் நண்பர். ‘அல்ல இந்தப் புடவைக்கு ஒரு விசேஷச் சிறப்பு உண்டு. இதுதான் உண்மையான வாயில் புடவை!” என்றார் கி.வா.ஜ.



மீண்டும்ஃப்ரூட்சாலட்-உடன்அடுத்தவெள்ளியன்றுசந்திக்கும்வரை

நட்புடன்

வெங்கட்.
புதுதில்லி.

டேலியா.... ஓ... டேலியா

0
0

இந்த இனிய ஞாயிறு காலையில் உங்கள் கண்களுக்குக் குளிர்ச்சியாய் டேலியா பூக்களின் அணிவரிசை.  தில்லியில் உள்ள Garden of Five Senses என்ற பூங்காவில் எடுத்தவை!









மீண்டும் அடுத்த ஞாயிறன்று வேறு சில படங்களோடு சந்திக்கும்வரை….


நட்புடன்


வெங்கட்.

புது தில்லி.


என் இனிய நெய்வேலி!

0
0


'மனச் சுரங்கத்திலிருந்து' என்ற அடையாளத்தோடு நான் பிறந்த நகரமான நெய்வேலி நினைவுகளை அவ்வப்போது எழுதி வந்திருக்கிறேன்.   ஊரின் சிறப்புகள், நினைவுகள் பற்றி சில காலமாய் எழுத வில்லையே என்று எனக்குள் அவ்வப்போது பட்சி ஒன்று சொல்லிக்கொண்டே இருந்தது. இதோ நெய்வேலி பற்றிய பதிவுடன் வந்துவிட்டேன்.

சுதந்திர இந்தியாவில் பெரிய தொழிற்சாலைகள் யாவும்  பெரும்பாலும் வடக்கிலேயே அமைக்கப்பட்டு வந்த காலம்.  தமிழ்நாட்டில் கனரகத் தொழிற்சாலைகள் அமைக்கப்படவில்லை.  அப்போது ஆரம்பித்ததுதான்   வடக்கு வாழ்கிறது! தெற்கு தேய்கிறது என்ற கோஷம்!  தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த கர்மவீரர் காமராஜர் முயற்சியினால் பல தொழிற்சாலைகள் தமிழகத்தில் அமைக்கப்பட்டன.
 

 


பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலை, சென்னை கிண்டி இந்துஸ்தான் டெலிபிரிண்டர் தொழிற்சாலை, நீலகிரியில் ஃபிலிம் தொழிற்சாலைன்னு  பல தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. 1956-ஆம் ஆண்டு அப்போதைய தென்னாற்காடு மாவட்டத்தின் [தற்போதைய கடலூர் மாவட்டம்] நெய்வேலி நகரில் பழுப்பு நிலக்கரி கிடைக்கும் என்று தெரியவந்ததும், பெருந்தலைவர் காமராஜர் முயற்சியில் ரூபாய் 160 கோடி மதிப்பில் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.  ஆரம்பித்த காலத்தில் 25 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்டதாக இருந்த இந்த நிறுவனம் இப்போது பெரிய ஆலமரமாக வளர்ந்திருக்கிறது.

நெய்வேலி ஆரம்பித்தது பற்றி  அவ்வூர் பேருந்து நிலையத்தில் பிச்சை எடுத்த ஒருவர் பாடிய பாட்டென என் அம்மா சொன்ன பாடல் கீழே:-

கடலூருக்கு நேர் மேற்கு நெய்வேலிதாங்க!
அங்கே நிலக்கரியின் வேலை ரொம்ப பிரமாதம் தாங்க!
ஆதியிலே ஜெம்புலிங்க முதலியார்தாங்க
அங்கே நிலத்தில் ஒரு கிணறு வெட்ட கரியைக் கண்டாங்க!

முதல் நான்கு அடி மட்டுமே கேட்ட நிலையில் பேருந்து அங்கிருந்து நகர்ந்துவிட அவர் பாடிய முழு பாடலும் கேட்க முடியவில்லையே என்ற வருத்தம் அம்மாவுக்கு இன்னமும் உண்டு நாற்பது வருடங்கள் கடந்த பின்பும்! அந்த வருத்தம் எனக்கும் தெரிந்திருந்தால் முழுப் பாடலையும் உங்களுடன் பகிர்ந்திருக்கலாமே என்று... நெய்வேலி மேல் கொண்ட காதலினால் பாடலின் இந்த நான்கு வரிகளும் பசுமரத்தாணி போல இன்னமும் அம்மாவின் நினைவிலிருக்கிறது!

சுத்தமான காற்று, நிறைய மரங்கள் [தானே புயலில் பல மரங்கள் விழுந்தது என்னை மனதளவில் மிகவும் பாதித்தது!], வேலை பார்க்கும் தொழிலாளிகளின் பிள்ளைகள் படிக்க நல்ல பள்ளிகள், மருத்துவமனை, கல்லூரி, எல்லா மதங்கள் சார்ந்தவர்களின் வழிபாட்டுத் தலங்கள், பொழுது போக்கிற்கு திரையரங்கம், விளையாட்டு அரங்கம் என்று ஒரு நல்ல ஊர். 

மின்சாரம் ஒரு யூனிட் வெறும் 11 பைசா தான் [1991 வரை!].  இருபத்தி நான்கு மணி நேரமும் தடையில்லாத மின்சாரம்ன்னு  இருந்த இடத்தை விட்டு இப்போது திருச்சியில் எனது பெற்றோர்கள் நாள் ஒன்றுக்கு 15 மணி நேரம் மின்வெட்டில் அவஸ்தைப் படுகிறார்கள். நெய்வேலியிலே கடைசி வரை இருக்க முடியாதே! 

சென்னையில் மோசமான தண்ணீர் கஷ்டம் வந்தபோது ரயில் மூலம் தண்ணீர் அனுப்பிய நல்லெண்ணம் கொண்ட ஊர். தொட்டி முழுவதும் உள்ள நீரை பக்கெட் பக்கெட்டாக குளித்த எங்களுக்கு சிறிய mug-ல் குளிக்கப்  பழகுவது கஷ்டமாகவே இருந்தது! தோட்டம், மரங்கள், பூச்செடிகள் என்று பசுமையான சூழலில் வளர்ந்து விட்டு இங்கே கான்க்ரீட் காடுகளில் தான் மீதி நாட்களைக் கழிக்க வேண்டும் என்று எண்ணும்போது மனதில் சொல்ல முடியாத வலி!

ஆனாலும் இதுவும் கடந்து போகும் என்றே, பழைய நினைவுகளுடன் காலத்தினைக் கடத்த வேண்டியிருக்கிறது.  என் நண்பர் ஒருவர் நெய்வேலியில் அப்படி என்னதாண்டா இருக்கு!” என்று கேட்கும்போது அத்தனை கோபம் வரும் எனக்கு! எங்க ஊர் மாதிரி வரவே வராது’ என்று அடித்துச் [அவரைத்தாங்க!] சொல்வேன்.

தில்லி வந்து சில வருடங்கள் வரை [அதாவது அப்பா அங்கே வேலையிலிருந்த 1996 வரை] அங்கு தொடர்ந்து செல்ல முடிந்தது.  இப்போது முடிவதில்லை ஒரு வேளை சென்றால் இப்போதைய நெய்வேலி எப்படி இருக்குமோ என்ற பயம் எல்லாம் இல்லை!  - நேரமும் சூழ்நிலைகளும் வாய்க்கவில்லை.   சில வருடங்களுக்கு முன் பங்குனி உத்திரத்தின் போது சென்று வந்தேன். அந்த பயணத்தின் போது நான் சைக்கிளில் நண்பர்களோடு பயணம் செய்த அத்தனை தெருக்களையும், ஆசையாக  சுற்றி வந்தேன்!  இன்னமும் ஆசை இருக்கிறது. நெய்வேலி பயணம் எப்போது வாய்க்கும்  என்பது தான் புரியாத புதிராக இருக்கிறது.   

மீண்டும் அடுத்த பகிர்வுடன் உங்களைச் சந்திக்கும் வரை அந்த இனிய நினைவுகளை அசை போட்டபடியே இருப்பேன்...

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


படுத்த நிலையில் ஹனுமான்

0
0


திரிவேணி சங்கமம்  காசி பயணம்  பகுதி - 11

இப்பயணத்தொடரின் முந்தைய பகுதிகள்பகுதி 1 2 3 4  5 6 78910

முஸ்கி:  ஒவ்வொரு திங்களும் வர வேண்டிய இத்தொடரில் சற்றே இடைவெளி.  தீபாவளி பயணமும், மற்ற வேலைகளும் நேரத்தினை எடுத்துக் கொண்டதால் வந்த இடைவெளி.



சென்ற பகுதியில் அக்பர் கட்டிய கோட்டை, அக்‌ஷய் வட் மற்றும் பாதாள்புரி போன்ற இடங்கள் பற்றி பார்த்தோம்.இந்த பகுதியில் சங்கமத்திற்கு மிக அருகிலேயே இருக்கும் பிரசித்தி பெற்ற ஹனுமான் கோவில் பற்றி பார்க்கலாம். இக்கோவிலில் நின்ற கோலத்தில் இல்லாது வித்தியாசமாக படுத்த நிலையில் இருக்கிறார் அஞ்சனி மைந்தர். சங்கமத்திற்கு வரும் அனைத்து மக்களும் இக்கோவிலுக்கும் வந்து செல்வதால் எந்நேரத்திலும் கூட்டம் இருக்கிறது. 

இக்கோவில் பற்றிய கதையை அங்கேயிருக்கும் பிரசாதக் கடைகளில் எழுதி வைத்திருக்கிறார்கள்.  பிரசாதம் என்றால் ஏதோ நம் ஊர் எள்ளு சாதம் என நினைக்க வேண்டாம்!  வடக்கில் ஹனுமனுக்கு படைப்பது – பூந்தி அல்லது மோதிசூர் லட்டு மட்டுமே. சரி கதையைப் பார்ப்போமா?

உத்திரப் பிரதேசத்தின் கன்னோஜ் நகரத்தினைச் சேர்ந்த வியாபாரி ஒருவருக்கு அளவில்லாத சொத்து.  ஆனால் அவருக்குப் பின் அவற்றை கட்டிக்காக்க, அனுபவிக்க ஒரு மகவு இல்லாதது அவருக்குப் பெரும் குறை.  சங்கடங்களை தீர்க்க வல்ல ஹனுமனுக்கு ஒரு கோவில் எழுப்பினாலாவது தனக்கு சந்தான பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விந்தியாசல மலையில் ஒரு கோவில் எழுப்ப முடிவு செய்தார் கன்னோஜ் வியாபாரி. 

மலையிலிருந்து பெரிய கல்லாகத் தேர்வு செய்து பெரிய ஹனுமான் விக்ரஹமும் தயார் ஆனது.  [B]படே ஹனுமான் விக்ரஹத்தினை கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்கு முன் புண்ணிய நதிகளில் நீராட்ட முடிவு செய்தார் வியாபாரி.  ஒவ்வொரு நதியாகச் சென்று நீராட்டிய பிறகு அவர் கடைசியில் வந்தது அலஹாபாத்தின் சங்கமத்திற்கு – மூன்று நதிகள் சங்கமிக்கும் இடமாயிற்றே. அங்கே நீராட்டினால் சிறப்பன்றோ.

கங்கைக் கரையில் விக்ரஹம் படுத்த நிலையில் இருக்க, மாலை நேரம் ஆகிவிட்டபடியால், அன்று சங்கமக் கரையிலேயே உறங்கி அடுத்த நாள் பயணத்தினை தொடர முடிவானது.  அடுத்தது விந்தியாசல மலையில் விக்ரஹத்தினை கொண்டு சேர்த்து கோவிலை எழுப்ப வேண்டியது தான் பாக்கி.  தான் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்என்று சொல்வார்கள்.  அதுதான் இங்கேயும் நடந்தது.



அன்று உறக்கத்தில் கன்னோஜ் வியாபாரியின் கனவில் ஹனுமான் எழுந்தருளி தான் கங்கைக் கரையிலேயே கோவில் கொள்ள விரும்புவதாகச் சொல்ல, வியாபாரியும் அப்படியே செய்ய முடிவு செய்தாராம்.  அங்கே கோவில் கட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்வதற்காக கன்னோஜ் திரும்புகிறார்.  அங்கே கங்கைக் கரையில் படுத்த நிலையில் ஹனுமார்.

நெடு நாட்கள் பயணத்திற்குப் பிறகு வீடு திரும்பிய அந்த வியாபாரி தனது சொந்த வேலைகளில் ஆழ்ந்து விட, சில மாதங்களில் வியாபாரியின் மனைவி அழகான ஒரு குழந்தையை பெற்றெடுத்தாள். கோவில் கட்ட நினைத்த வியாபாரியும் தனது கோரிக்கை நிறைவேறிய காரணத்தினாலோ என்னமோ, கோவில் கட்டுவதை அடியோடு மறந்து விட்டார் போலும்!  கங்கைக் கரையில் படுத்த நிலையில் இருந்த ஹனுமன் கால ஓட்டத்தில் மண்ணுக்குள் மண்ணாய்!

சில காலத்திற்குப் பிறகு கங்கையில் புனித நீராட வந்த ஒரு சாமியார் குளிப்பதற்கு கங்கையில் இறங்குமுன் தன்னுடைய திரிசூலத்தினை பூமியில் ஊன்ற ஏதோ கல்லில் மோதும் சத்தம் வர, அந்த இடத்தினைத் தோண்டினால் அங்கே ‘[B]படே ஹனுமான்அவரை நோக்கி மந்தஹாச புன்னகை வீச, அவருக்கு அங்கேயே கோவில் எழுப்ப முடிவு செய்தார்கள்.

படுத்த நிலையில் இருக்கும் ஹனுமான் சிலையை நேராக நிற்க வைத்து கோவில் எழுப்ப எவ்வளவு முயற்சி செய்தும் முடியவில்லையாம்.  அதனால் அதே நிலையில் பூமிக்குள் ஒரு தொட்டி போல கட்டி அங்கேயே பிரதிஷ்டை செய்து வழிபட ஆரம்பித்தார்களாம்.  தற்போது கோவில் சுற்றி பல கட்டுமான பணிகள் செய்யப்பட்டு விட்ட்து.  பக்தர்களும் சங்கமத்தில் நீராடி இங்கே ஹனுமனின் தரிசனம் கண்டு செல்கிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் கங்கை கரை புரண்டு ஓடும்போது ஹனுமனின் கால் வரை தண்ணீர் வந்து செல்லுமாம்.  ஹனுமனின் பாத கமலத்தினை கங்கையே பூஜித்துச் செல்கிறாளோ! 



செவ்வாய்க் கிழமைகளில் வெளியூர் பயணிகள் மட்டுமல்லாது உள்ளூர் மக்களும் வந்து வழிபாடு செய்கிறார்கள். சிறப்பான இக்கோவிலில் ஹனுமனை தரிசித்து வெளியே வந்தோம்.  அடுத்ததாக நாங்கள் சென்றது காமாட்சி கோவில்.  அவ்வனுபவத்தினை அடுத்த பகுதியில் பார்க்கலாம்!

மீண்டும் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

ஃப்ரூட் சாலட் – 22: – சூரிய ஒளியில் தயாராகும் உணவு – ஜப்பானில் சுஜாதா

0
0



இந்த வார செய்தி: 

 
தில்லியில் இருக்கும் அக்ஷர்தாம் கோவில் பற்றிய செய்திகளை நீங்கள் அறிந்திருக்கலாம். பிறிதொரு சமயத்தில் “தலைநகரிலிருந்துதொடரில் எழுதுகிறேன்.  இன்று சொல்லப் போவது அக்கோவிலில் தயாராகும் உணவு பற்றியது.  கோவிலில் தினமும் சுமார் 4000 பேருக்கு உணவு தயார் செய்யப்படுகிறது.  இதுவரை குழாய் மூலம் இந்திரப்பிரஸ்தா வாயு நிறுவனம் தரும் இயற்கை வாயு கொண்டு தயாரிக்கப்பட்ட உணவு இனிமேல் சூரிய ஒளி கொண்டு தயாரிக்கப்பட இருக்கிறது.

ARUN®100என்று பெயரிடப்பட்டுள்ள சூரிய ஒளியைக் குவித்து நீராவி உருவாக்கி அதன் மூலம் சாதம், பருப்பு, காய்கறிகள் வேகவைத்து உணவு தயாரிக்கிறார்கள்.  இந்த சூரிய ஒளி அடுப்பின் மூலம் உணவு தயாரிப்பதால் இயற்கை வாயு, எல்.பி.ஜி போன்றவற்றால் உண்டாகும் மாசுகள் உண்டாவதில்லை என்பது கூடுதல் சிறப்பு.

தற்போது தமிழகத்தில் நிலவும் கடுமையான மின்சார தட்டுப்பாடு சமயத்தில் எங்கெங்கு முடியுமோ அங்கெல்லாம் சூரிய ஒளியை பயன்படுத்தினால் இருண்டிருக்கும் தமிழகத்தில் நிச்சயம் ஒளி பிறக்கும். சற்றே விலை அதிகம் என்றாலும் நிச்சயம் பலன் தரும் விஷயம் என்றே தோன்றுகிறது.

நமது தமிழகத்தில் சூரிய ஒளி பயன்படுத்தி பயன்பெறுவது எப்போது – சூரியனுக்கே வெளிச்சம்!


இந்த வார முகப்புத்தக இற்றை:

கோபமாய் பேசினால் குணத்தை இழப்பாய்
அதிகமாய் பேசினால் அமைதியை இழப்பாய்
வெட்டியாய் பேசினால் வேலையை இழப்பாய்
வேகமாய் பேசினால் அர்த்தத்தைஇழப்பாய்
ஆணவமாய் பேசினால் அன்பை இழப்பாய்
பொய்யாய் பேசினால் பெயரை இழப்பாய்
சிந்தித்துப் பேசினால் சிறப்பாய் இருப்பாய்!

இந்த வார குறுஞ்செய்தி

Earning a relation is a reward of our trust. Maintaining the same is the result of our sacrifice and strengthening the same is the result of our care.

ரசித்த புகைப்படம்: திங்கள் முதல் ஞாயிறு வரை நமது நிலையை இதை விட அழகாய் படம் பிடிக்க முடியுமா தெரியவில்லை! நீங்களும் பார்த்து ரசியுங்களேன்!


 
ரசித்த பாடல்இமயம் படத்திலிருந்து கங்கை யமுனை இங்கு தான் சங்கமம் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.  மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. அவர்களின் இசையில் கானகந்தர்வன் கே.ஜே. யேசுதாஸ் வாணி ஜெயராம் அவர்களுடன் இணைந்து பாடிய பாடல்.  நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் ஸ்ரீவித்யா நடிப்பில் வெளிவந்த படம். இந்த பாடலை எழுதியவர் கண்ணதாசன்.  இதோ இப்பாடல் உங்கள் ரசனைக்காக...

.
ராஜா காது கழுதைக் காது: திருவரங்கம் ரயில் நிலையத்தில் பல்லவனுக்காக காத்திருந்த போது – ஒரு அம்மா தனது மகனிடம் “ஏண்டா நீயும் உங்கப்பா மாதிரியே பராக்கு பார்த்துட்டு நிக்கற, போய் நம்ம கோச் எந்த பக்கம் வரும்னு பார்த்துட்டு வா!


படித்ததில் பிடித்தது:

அண்மையில் ஜப்பானுக்குப் போயிருந்தேன். ஒரு வாரத்தில் அந்த வேறு உலகத்தில் எனக்கும் சுத்தமும் ஒழுங்கும் மூச்சு திணறியது. ஜப்பானில் ஜப்பானியர்களைத் தவிர வேறு ஒருவரும் தொடர்ந்து வாசம் பண்ண முடியாது. அங்கு சனநாயகமா இல்லை சர்வாதிகாரமா என்று கண்டுபிடிக்க முடியாதபடி அத்தனை மக்களும் தம்மைத்தாமே கட்டுப்படுத்திக் கொண்டு புன்னகை மிஷன்களாய் உலவிவரும் இந்த நாட்டின் முன்னேற்றத்தைப் பார்க்க பயமாக இருக்கிறது.

பன்னிரண்டு கோடி மக்களில் ஒன்றரைக் கோடி தொண்டு கிழவர்களும், கிழவியர்களும் செத்துப் போக மாட்டேன் என்கிறார்கள். இவர்களை பராமரிக்க அரசாங்கம் திணறுகிறது. சுபிட்சத்தை சமாளிக்கவும் திணறுகிறார்கள். பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல், பாத்ரூம்களை அலங்கரிப்பதிலும், பத்தாவது மாடியில் வீனஸ் டிமிலோ சிலை அமைப்பதிலும், அமெரிக்க பல்கலைக் கழகங்களை விலைக்கு வாங்குவதிலும், அமெரிக்க கம்பெனிகளில் சிறுபான்மை ஷேர் வாங்குவதிலும் செலவு பண்ணுகிறார்கள்.

ஜப்பானில் நான் இருந்த பத்து நாட்களில் மொத்தம் மூன்று போலீஸ்காரர்களைத் தான் பார்த்தேன்.

திரும்பியபோது சென்னைக்கு வெங்கடராமன் வரப் போகிறார் என்று விமானநிலையத்திலிருந்து துவங்கி மவுண்ட் ரோடு வரை மரத்துக்கு மரம் போலீஸ்காரர்கள்.

-          சுஜாதா, கணையாழியின் கடைசி பக்கம், அக்டோபர், 1989.



மீண்டும்ஃப்ரூட்சாலட்-உடன்அடுத்தவெள்ளியன்றுசந்திக்கும்வரை


நட்புடன்


வெங்கட்.
புதுதில்லி. 

பூந்தொட்டிகள்

0
0




சென்ற ஞாயிறன்று நான் எடுத்த சில டேலியா மலர்களின் புகைப்படங்களை உங்கள் பார்வைக்கு பகிர்ந்தேன்.  இந்த வாரம் வீட்டிற்குள் சில பூச்செடிகளை, அல்லது பூக்களை வைத்து அழகு செய்ய சில பூந்தொட்டிகளின் படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.  இப்படங்களும் தில்லியின் Garden of Five Senses என்ற பூங்காவில் எடுத்தவை தான்.


ஒட்டகத்தில் சவாரி போக வாரீகளா?


நான் உங்கள் வீட்டுச் செடியை இப்படி அழகா பார்த்துப்பேன்...
பிச்சு போட மாட்டேன்!


நான் தண்ணில மட்டுந்தான் இருப்பேன்னு யார் சொன்னது... 
உங்க வீட்டுக்குள்ள கூட வருவேன்.


நான் பத்ரமா பார்த்துக்கறேன்
செடி மட்டும் வைச்சுடுங்க ப்ளீஸ்....


யார்ப்பா இது, பிஞ்சு கால்மேல பூத்தொட்டி வைச்சது....

என்ன நண்பர்களே படங்களை ரசித்தீர்களா....  மீண்டும் அடுத்த ஞாயிறன்று வேறு சில புகைப்படங்களோடு உங்களைச் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி. 

அம்மாவின் கைபேசி

0
0



ஒரு சனிக்கிழமை அன்று காலை திருவரங்கத்திலிருந்து பல்லவன் பல்லில் மாட்டிக்கொண்டு சென்னை வந்தேன். மாலை தமிழகத்தின் தலைநகரிலிருந்து இந்தியத் தலைநகருக்குச் செல்ல தமிழ்நாடு விரைவுவண்டியை பிடிக்க வேண்டும்.  சென்னை அருகே வரும்போது தில்லி நண்பர் பத்மநாபன் [எனது பதிவுகளில் ஈஸ்வரன் என்ற பெயரில் கருத்துப் பகிரும் நண்பர்] அவர்களின் கைபேசியில் அழைக்க தானும் சென்னையில் இருப்பதாகவும், அவரும் அன்றைய இரவு தமிழ்நாடில் தில்லி செல்வதாகவும் சொன்னார். நல்லவேளை மதியத்திலிருந்து இரவு வரை பொழுது போக்க ஒரு வழி கிடைத்தது!

சென்னை சென்ட்ரலில் உடைமைகளை பாதுகாப்பு அறையில் வைத்துவிட்டு வெளியே வந்தோம். மதிய உணவை முடித்து விட்டு, வெளியேறினோம்.  இரவு வரை பொழுது போக வேண்டுமே, அதனால் ஏதாவது சினிமாவிற்குப் போகலாம் என பேருந்து பிடித்து சாந்தி திரையரங்கிற்குச் சென்றோம்.  அங்கே பார்த்தால் மூன்றரை மணிக்கு அம்மாவின் கைபேசி, நான்கு மணிக்கு ‘போடா போடிஎனப் போட்டிருந்தார்கள்.  சரி பக்கத்து திரையரங்கில் என்ன என்று பார்த்தால் அங்கே துப்பாக்கி, சுந்தரபாண்டியன், போன்ற படங்கள்.  துப்பாக்கி படம் ஹவுஸ் ஃபுல்.  சுந்தரபாண்டியன் ஆறு மணிக்குத் தான்.  அதனால் வேறு வழியின்றி அம்மாவின் கைபேசி பார்க்க முடிவு செய்தோம். விதி வலியது என்று புரியவில்லை அப்போது.

சரி படத்தின் கதைக்கு வருவோம். ஒன்பது பிள்ளைகளைப் பெற்ற அம்மாவின் [ரேவதி] கடைசி பிள்ளை அண்ணாமலை [சாந்தனு]. செல்லப்பிள்ளையான அண்ணாமலை வேலைக்குப் போகாமல் ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார். மாமன் மகள் செல்வி [இனியா] மீது கொண்ட காதலால் நல்ல பிள்ளையாக மாறி, மாமாவிடமே வேலைக்குச் சேர்கிறார்.  இனியாவுடன் ஒரு டூயட்டும் பாடுகிறார். 



வீட்டில் நடந்த ஒரு விழாவின் போது தங்கநகை காணாமல் போக அண்ணாமலை மீது சந்தேகம் கொண்டு அவரை அவரது அம்மாவே துடப்பத்தால் அடித்துத் துரத்தி விடுகிறார்கள். சில முதலாளிகளிடம் வேலைப் பார்த்து பிறகு ஒரு கல் குவாரி முதலாளியிடம் வேலைக்குச் சேர்ந்து நல்ல நிலையை அடைகிறார்.  அதற்குள் ஏழு வருடங்கள் ஓடி விடுகிறது.  ஏழு வருடங்களாக்க் காத்திருந்த செல்வியும், அண்ணாமலையின் இன்னோரு சகோதரரை மணம் புரிகிறார்.  மணம் முடித்த நான்காம் நாள் அண்ணாமலையிடமிருந்து ஒரு கடிதம் வருகிறது.  கூடவே தலைப்பில் வரும் கைபேசியும்!  



அவ்வப்போது அம்மாவிடமும், செல்வியுடனும் பேசுகிறார். சீக்கிரமே வருவதாகச் சொல்கிறார். பணி செய்யுமிடத்தில் உண்மையாக நடந்து கொண்டதால் எதிரிகளைச் சம்பாதிக்கிறார். எதிரிகளின் கைப்பாவையாக பிரசாத் [தங்கர் பச்சான்].  அவர்கள் சொல்வதையெல்லாம் செய்து கடைசியில் எதிரிகள் சொல்பேச்சு கேட்டு சாந்தனுவை தீர்த்துக் கட்டுகிறாரா இல்லையா என்பது உங்களுக்கே புரிந்திருக்கும் – பாதி படத்திலேயே.  நடுவே தங்கர் பச்சானும் மனைவியுடன் ஒரு குத்தாட்டம் ஆடுகிறார். அவர் மனைவியாக நடித்திருப்பது மீனாள்.

பல இடங்களில் படம் பார்ப்பவர்களை “இது உனக்குத் தேவையா?என்று தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வைக்கிறது. பல காட்சிகள் வருவதற்கு முன்னே இப்படித்தான் இருக்கும் என ஊகிக்க முடிகிறது. பாடல்களும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.  தியேட்டரின் உள்ளே சுத்தமாக இருந்தாலும், கழிப்பறைகள் முகம் சுளிக்கவும், மூக்கை அடைக்கவும் வைக்கின்றன. பகல் காட்சியிலேயே பல டாஸ்மாக் மன்னர்களையும் பார்க்க முடிந்த்து.

படம் பார்த்து விட்டு எங்களையே நொந்து வெளியே வந்தபோது சாந்தி தியேட்டரின் வாசலில் பெரிய பேனர்களில் விதம் விதமாய் நடிகர் திலகத்தின் படங்கள் – மற்றும் சாந்தி தியேட்டர் பற்றி இதழ்களில் வந்திருந்த பேட்டிகள் ஆகியவை இருந்தது. அதில் இருந்த ஒரு சிவாஜி படம் – நெற்றியில் கைவைத்து சிரிப்பது போன்ற படம் – எங்களிருவரையும் பார்த்து, இந்தப் படத்தையா பார்த்துட்டு வர என்று சிரிப்பது போல இருந்தது!

ஒரு வழியாக சென்னை சென்ட்ரல் திரும்பி தமிழகத்திற்கு வணக்கம் சொல்லி தமிழ்நாடு விரைவு வண்டியில் தில்லி கிளம்பினோம்! இனி சினிமா பார்ப்பதற்கு, அதாவது தில்லியில் திரையரங்கம் சென்று சினிமா பார்ப்பதற்கு வாய்ப்புகள் குறைவு.  அடுத்த முறையாவது நல்ல சினிமாவாக பார்க்க வேண்டும்.

வேறொரு பகிர்வில் உங்களைச் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

விளம்பரங்கள் அன்றும் இன்றும்

0
0


நிறைய ஊடகங்கள் இருக்கும் நிலையில்  சாதாரண பற்பொடியிலிருந்து பளபளப்பான வைரக்கற்கள் பதித்த நகைகள் வரை  எந்த ஒரு பொருளையும் சுலபமாக மக்களைச் சென்றடையும்படி விளம்பரம் செய்வதில்  தொலைக்காட்சிகள் பெரும் பங்காற்றுகின்றன. 



சமீபத்தில் வந்த ICICI Bank இன் விளம்பரம் பார்த்தீர்களா? இரு சிறுமியர் ஒரு கடைக்குச் சென்று மிட்டாய் வாங்குவது போல் காண்பித்து நமது சிறு வயது நினைவுகளைத் தூண்டி விடுவார்கள். ஒரு நிமிடம் இருபது விநாடிகள் ஓடும் இந்த விளம்பரம், 10 பைசா ஐஸ் குச்சிக்காக, கையில் டம்ளரோடு தெருவில், அக்காவுடன் ஓடியதை  நினைவுக்கு வரவழைத்தது.  ஐந்து பைசாவிலும், 10 பைசாவிலும் பெற்ற கமர்கட் தேன் மிட்டாய் புளிப்பு மிட்டாய் சந்தோஷங்கள் அப்படியே நினைவில் வந்து நிறுத்திய விளம்பரம்.  இது வரை பார்க்காவிட்டால் இங்கே  பாருங்க.
.




மற்றுமொரு விளம்பரம் இதுவும் குழந்தைகளை வைத்து எடுத்த விளம்பரம் தான்.  ப்ரிட்டானியா குட் டே பிஸ்கெட்டுகளுக்காக எடுத்த இந்தக் காணொளியைப் பாருங்கள்.  குழந்தைகள் முகத்தில் ஏமாற்றமும், பிஸ்கெட் கிடைத்த பின் உள்ள குதூகலத்தையும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்
!


சினிமாவிற்கு வரும் விளம்பரங்கள் பற்றி சொல்லவே தேவையில்லை. புதிதாய் ஒரு படம் பூஜை போட்டாலே, தமிழில் இருக்கும் அத்தனை தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் போட்டி போட்டுக் கொண்டு அப்படத்தின் விளம்பரங்கள் வர ஆரம்பித்து விடுகின்றன.  நாளிதழ்களும் முழுப்பக்க வண்ண விளம்பரங்கள், செய்திகள், கிசுகிசுக்கள் என்று வெளியிட்டு அப்படத்தினை மக்களுக்கு அறிமுகம் செய்கிறார்கள். 

ஆனால், இந்நாள் போல இத்தனை ஊடகங்கள் இல்லாத அந்தக் காலத்தில் விளம்பரங்கள் செய்ய வானொலியோ, வார இதழ்களோ, சிறப்பு மலர்களோ பயன்பட்டன.  நண்பர் பால கணேஷ் தன்னுடைய மேய்ச்சல் மைதானம் வலைப்பூவில் ர்ர்ர்ர்ரீவைண்ட் சினிமா! என்ற பதிவில் 1948 - ஆம் வருடத்திய பேசும்படம் இதழிலிருந்து, அலிபாபாவும் 40 திருடர்களும், வேதாள உலகம், பக்தஜனா, ஜீவஜோதி போன்ற படங்களுக்கு வெளியான விளம்பரங்களை வெளியிட்டிருந்தார்.  

அதே போல 1949 ஆம் வருடம் வந்த சில விளம்பரங்கள் சினிமா விளம்பரங்கள் இல்லாது கார், இன்சூரன்ஸ், போன்றவற்றின் விளம்பரங்களை இன்றைய பொக்கிஷப் பகிர்வாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.     



ப்யூக் ஸுபர் 1949 ஆம் வருட மாடல் கார் விநியோகஸ்தர்களான டி.வி. சுந்தரம் அய்யங்கார் &ஸன்ஸ் லிமிடெட்”  வெளியிட்ட விளம்பரம்.


பிருத்வி இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் வெளியிட்ட கொடுக்கிற தெய்வம்விளம்பரம்.



நீங்கள் அழகு பெற சுலபமான வழி சொல்லும் மைசூர் சந்தன சோப் விளம்பரம் 

.

அரைக்கீரை விதை தைலம் இது என்னவென்று தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்!



இன்றைக்கு வழக்கொழிந்து விட்ட ரிப்பன்களுக்குக் கூட அந்நாளில் விளம்பரம் செய்திருக்கிறார்கள்....



ரேடியோ வாங்குவது ஒரு சம்பிரதாயம் என்று சொல்லும் ரேடியோக்களுக்கான விளம்பரம்...

என்ன நண்பர்களே இக்கால மற்றும் அக்கால விளம்பரங்களைக் கண்டு ரசித்தீர்களா

மீண்டும் வேறொரு பொக்கிஷப் பகிர்வுடன் சந்திக்கும் வரை...

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி 

.

ஷங்கர் விமான மண்டபம் மற்றும் குஸ்ரோ பாக்

0
0


திரிவேணி சங்கமம்  காசி பயணம்  பகுதி - 12

இப்பயணத்தொடரின் முந்தைய பகுதிகள்பகுதி 1 2 3 4  5 6 7891011

சென்ற பகுதியில் [B]படே ஹனுமான் கோவில் பற்றிய விவரங்களைப் பார்த்தோம். இந்தப் பகுதியில் நாம் பார்க்க இருப்பது ஹனுமான் கோவில் அருகே இருக்கும் ஷங்கர் விமான மண்டபம் பற்றி.

காஞ்சிபுரம் நகரில் இருக்கும் காஞ்சி காமகோடி பீடத்தினால் அலஹாபாத் நகரில் கட்டப்பட்ட கோவில் தான் இந்த ஷங்கர் விமான மண்டபம். முற்றிலும் தென்னகத்தின் கட்டிடக்கலை பயன்படுத்தி கட்டப்பட்ட இந்த கோவில் அலஹாபாத் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்தில், சங்கமத்திற்கு வெகு அருகிலேயே இருக்கிறது. மொத்தம் நான்கு மாடிகள் கொண்ட இக்கோவிலில் சிறப்பான சிற்பங்கள் இருக்கின்றன. 16 தூண்கள் தாங்கிக் கொண்டிருக்கும் இந்தக் கோவிலின் மொத்த உயரம் 130 அடி.


கோவில் நுழைவாயில்

1970-ஆம் ஆண்டு கட்ட ஆரம்பித்து 1986-ஆம் வருடம் கட்டி முடிக்கப்பட்டது. கோவிலின் வாயிலில் ஆதி சங்கரர் மற்றும் மந்தன் மிஷ்ரா [இவர்களுக்கிடையே நடந்த விவாதம் பிரபலமானது] அவர்களுடைய உருவச் சிலைகள் வைத்திருக்கிறார்கள்.  கோவிலின் உள்ளே மீமாம்ச தத்துவத்தினை பரப்பிய குமாரில பட்டர், ஜகத்குரு சங்கராச்சாரியர், காமாட்சி தேவி [51 சக்திபீடங்களுடன்], திருப்பதி பாலாஜி [108 விஷ்ணுவுடன்], யோகஷாஸ்திர சஹஸ்ரயோக லிங்கம் [108 லிங்கம்] ஆகிய சிலைகளும் இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது.

 கோவிலின் முழுத் தோற்றம் - பட உதவி கூகிள்.

அழகிய சிற்பங்கள் ஆங்காங்கே இருக்கின்றன.  ஆதி சங்கரரின் வாழ்க்கை வரலாற்றினை ஓவியங்களாக வரைந்து கோவிலின் சுவற்றில் வைத்திருக்கிறார்கள்.  காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை கோவில் திறந்திருக்கும். சிறப்பான விழாக்களும் இங்கே கொண்டாடப்படுகின்றன. 

கோவில் மிகவும் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு இருக்கிறது.  இங்கேயும் உள்ளே சென்று பார்வையிட ஐந்து ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார்கள். [நான் சென்ற நேரத்தில் பொது சேவை இல்லையோ!]

கோவிலின் வெளியே வரிசையாக நிறைய கடைகள். கடைகளில் விற்பது - வேறென்ன பெண்களுக்கான வளையல்கள், மோதிரங்கள், பொட்டு போன்றவை தான். மகளுக்கும் மனைவிக்கும் சில பொருட்களை வாங்கிக்கொண்டு அங்கிருந்து காரில் கிளம்பினோம் அடுத்த இலக்கை நோக்கி. 

அடுத்ததாய் நாம் பார்க்கப்போவதுஒரு அழகிய பூங்கா பற்றி.  கி.பி. 1606 ஆண்டு கட்டப்பட்டது இப்பூங்கா.  பூங்காவின் பெயர் மற்றும் பூங்கா இருக்கும் இடத்தின் பெயரும் குஸ்ரோ பாக் [Khusrau Bagh].இவ்வழகிய பூங்காவினுள் சுல்தான் பேகம், நிடார் பேகம் மற்றும் குஸ்ரோ மிஸ்ரா ஆகியோருடைய சமாதிகள் இருக்கின்றன.


குஸ்ரோ பாக் [Khusrau Bagh] - பட உதவி கூகிள்.

அலஹாபாத் ரயில் நிலையத்தின் வெகு அருகிலேயே அமைந்திருக்கும் இந்தப் பூங்காவினுள் அமைந்திருக்கும் கட்டிடம் முகலாயக் கட்டிடக்கலையின் சிறப்பினை இன்றளவும் பறைசாற்றிக்கொண்டு இருக்கிறது.  முகலாய மன்னர் ஜஹாங்கீர் அவர்களின் முதல் மனைவி ஷா பேகம் அவர்கள் 1604-ஆம் ஆண்டு இறக்க, அவருக்கு ஒரு சமாதி எழுப்பி, அதனைச் சுற்றி ஒரு பெரிய பூங்காவும், பூங்காவினைச் சுற்றி பெரிய மதில் சுவரும் எழுப்பியுள்ளார்கள். 

ஜஹாங்கீரின் மூத்த மகன் குஸ்ரோ, தனது தந்தைக்கு எதிராக குரல் கொடுத்த போது இங்கே தான் சிறை வைக்கப்பட்டார்.  தப்பிக்க முயற்சி செய்த போது அவரை கடுமையாகத் தண்டித்து சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டதாகவும், 1622-ஆம் வருடம் கொல்லப்பட்டதாகவும் வரலாறு சொல்கிறது.  அதன் பிறகு அவருக்கும் இங்கே சமாதி எழுப்பியிருக்கிறார்கள். 

இந்த இரண்டு சமாதிகளுக்கு இடையே இருக்கும் இடம் தான் மிகவும் அழகான வடிவமைப்பில் கட்டப்பட்டது. 1624-25-ல் கட்டப்பட்ட இது குஸ்ரோவின் சகோதரி சுல்தான் நிடார் பேகம் சொன்னபடியே அவருக்காக வடிவமைக்கப்பட்டது என அங்குள்ள பலகையில் எழுதி வைத்திருந்தார்கள்.

1857-ஆம் ஆண்டின் சிப்பாய்க் கலகத்தின் போது மௌல்வி லியாகத் அலி அவர்களுடைய தலைமையில் போரிட்ட சிப்பாய்களின் தலைமையகமாக இருந்தது இந்த குஸ்ரோ பாக் தான். அவர்கள் கைப்பற்றிய இரண்டே வாரத்தில் ஆங்கிலேயப் படைகளால் மீட்கப்பட்டதாம் இந்த இடம்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த இடத்தினையும் பார்த்து ரசித்தோம்.  அடுத்தது என்ன என்ற ஆர்வம் உங்களுக்கு இருக்கும்.  சீக்கிரமே மேலும் சில சிறப்பான இடங்களுக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன் வரும் காசி – அலஹாபாத் பயணப் பதிவுகளில்.

அடுத்த வாரம் இப்பயணத் தொடரின் அடுத்த பகுதியில் உங்களைச் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

ஃப்ரூட் சாலட் – 23 – தில்லியில் திருவிழா – குங்குமப் பூவே

0
0



குழந்தைகள் தினமாம் நவம்பர் 14 ஆம் தேதியில் தொடங்கி, நேற்றைய முன் தினம் அதாவது 27-ஆம் தேதி அன்று தில்லியின் வருடாந்திர திருவிழா முடிந்தது.  என்னது தில்லியில் திருவிழாவா? சொல்லவே இல்லை!என்பவர்களுக்கு, இது வருடாந்திர திருவிழாங்க. கிட்டத்தட்ட 32 வருஷமா நடந்துட்டு இருக்கு. பொழுது போக்கு அம்சங்கள் அதிகமாக இல்லாத தில்லியில், பல மக்களுக்கு இந்த பதினான்கு நாட்களும் திருவிழா தான்.

ஒவ்வொரு வருடமும் இந்த நாட்களில் பிரகதி மைதானம் வரும் மக்களின் அலைவெள்ளத்தில் பிதுங்கி வழியும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு நிரந்தரமான கட்டிடம், அதைத் தவிர வெளிநாட்டு அரங்குகள், அரசு துறைக்கான அரங்குகள், உணவுப் பொருட்களுக்கான இடங்கள் என்று எங்கும் மக்கள் கூட்டம் அலை மோதும். இந்த முறை கடைசி ஞாயிறான 25 ஆம் தேதி அன்று சுமார் ஒன்றரை லட்சம் பேர் கண்காட்சியைப் பார்க்க வந்திருந்தார்களாம். இதில் இடிமன்னர்களும், உரசல் மன்னர்களும், மொபைல்-பிக்பாக்கெட் அடிப்பவர்களும் அடக்கம்!



கண்காட்சி முடிந்த பிறகு சிறப்பான பங்காளர்களுக்கு பரிசுகள் வழங்குவார்கள். இந்த வருடத்தின் மாநிலங்களுக்கான முதல் பரிசு பெற்ற மாநிலம் – அசாம், இரண்டாம் பரிசு – கேரளா, மூன்றாம் பரிசு பஞ்சாபிற்கும் ராஜஸ்தானிற்கும்.  என்னது இதுவரை தமிழகம் பரிசு பெற்றிருக்கிறதா?என்றா கேட்டீங்க! எனக்கு நினைவு தெரிந்து இது வரை இல்லை. காரணம் என்று ஒருமுறை வந்து பார்த்தால் தெரிந்துவிடும்!



இந்த வருடம் வேலைகள் அதிகமாக இருந்ததால் நான் செல்லவில்லை. அதனால், போன வருடம் அசாம் அரங்கில் எடுத்த படங்களை இணைத்திருக்கிறேன். கேரள படமும் தான்!

எல்லா வருடங்களிலும் இதே நாட்களில் தான் இந்த திருவிழா நடக்கும். இச்சமயத்தில் வந்தால் நீங்களும் பார்த்து ரசிக்கலாம்.

இந்த வார முகப்புத்தக இற்றை:

இன்னும் எத்தனை நாளைக்குத் தான் காக்கா கல் போட்டு தண்ணீர் குடிச்சுதுன்னு சொல்லப் போறீங்க. இந்தக் காலத்து காக்காMODERN காக்கா...  குழாய் போட்டு உறிஞ்சுடும்!



இந்த வார குறுஞ்செய்தி

Heart is not a basket for keeping tension and sadness.  It’s a golden box for keeping roses of happiness…  Let your heart be happy always.

ரசித்த புகைப்படம்: 

எதாவது ஒரு இடத்தில் வரிசையாக வரவேண்டும் என எழுதி இருந்தால் ‘அவன் யார் சொல்றது?என்ற எண்ணத்தோடு குறுக்கே செல்பவர்கள் தாங்க நிறைய பேர்.  அவங்க எல்லாரும் இந்தப் பறவைகள் கிட்ட வகுப்புப் போகணும்.


  
ரசித்த பாடல்

இந்த வாரம் ஒரு பழைய பாடல்.  சரி சரி ஓடாதீங்க. நிச்சயம் ரசிக்கும்படியான பாடல் தான். நம்ம சந்திரபாபு பாட்டு. பாட்டுலயும், சந்திரபாபுவிடமும் என்ன ஒரு துள்ளல். என்ன பாட்டுன்னு கேட்கறீங்களா?  “குங்குமப் பூவே, கொஞ்சும் புறாவேஎனும் பாடல் தான். 1959- ஆம் வருடம் வெளிவந்த மரகதம் என்ற படத்தில், திரு சுப்பையா நாயுடுவின் இசையில் சந்திரபாபுவும், ஜமுனா ராணியும் பாடிய பாடல்.  நீங்களும் ரசியுங்களேன்.

 



ராஜா காது கழுதைக் காது:  

சமீபத்திய திருச்சி பயணத்தின் போது பேருந்து ஒன்றில் கேட்டது.  பாட்டி தனது நான்கு வயது சுமார் பேரனிடம்  – “கண்ணு, பார்த்து சாப்பிடணும், பப்பிள் கம் முழுங்கிடாத, வயத்துல போய் ஓட்டை போட்டுடும்!”. அதற்கு மகள் சொன்னது – ஏம்மா பஸ்ல இப்படி கத்தற, எல்லாம் அவனுக்குத் தெரியும்.

படித்ததில் பிடித்தது:
இப்படித்தான்....

அடைக்கப்படும் கதவின்
விருப்பமான சத்தத்திற்காக
உள் அறையில் காத்திருக்கிறேன்.
மிகுந்த கவனத்துடன்
சத்தமே கேட்காமல்
சாத்திவிட்டுப் போகிறார்கள்.
இப்படித்தான் ஒரு காரணமுமின்றி
இழந்துவிட நேர்கிறது
சின்னும் சிலவற்றை.

-          கல்யாண்ஜி

மீண்டும்ஃப்ரூட்சாலட்-உடன்அடுத்தவெள்ளியன்றுசந்திக்கும்வரை

நட்புடன்

வெங்கட்.
புதுதில்லி.

காந்தி ஸ்மிருதி – தில்லி

0
0


தில்லி சுற்றுலா வந்தால் பெரும்பாலான நிறுவனங்கள் அழைத்துச் செல்லும் இடங்களில் ஒன்று காந்தி ஸ்மிருதி. இந்த இடம் 5, தீஸ் ஜனவரி மார்க் எனும் வளாகத்தில் இயங்கி வருகிறது.  அங்கே எடுத்த சில படங்களை இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


The World Peace Gong - சகோதரத்துவம், இயற்கை, அமைதி ஆகியவற்றை பிரதிபலிக்கும் ஒரு சின்னம். இச்சின்னத்தில் அனைத்து ஐக்கிய நாடுகளுடைய கொடிகளும், உலகத்தின் பிரதான மதங்களின் சின்னங்களும் இதில் உள்ளது.



இந்த ரயில் எஞ்சின் உள்பக்கம் சென்று நீங்கள் காந்தி பயணம் செய்த இடங்களை காணொளியாகப் பார்க்கலாம்.


இது ஒரு இசைக்கருவி. இதன் மேல் இருக்கும் ஒரு சிறிய குச்சியால், ஒவ்வொரு பலகையாய் தட்டிக்கொண்டு வர “ரகுபதி ராகவ ராஜா ராம்என்ற பாடலில் ஒலியைக் கேட்க முடியும்!



நூல் நூற்கும் காந்தி.


காந்தியும் அவரது மனைவியும்....

காந்திஜியின் கண்ணாடி

என்ன நண்பர்களே இந்த வார படங்களை ரசித்தீர்களா? அவ்வப்போது தில்லியில் எடுத்த படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

நகரம் – சுஜாதா

0
0



பட உதவி: நன்றி பால் ஹனுமான் ஜி!



பாண்டியர்களின் இரண்டாம் தலைநகரம் மதுரை. பண்டைய தேசப் படங்களில் ‘மட்ராஎன்று காணப்படுவதும், ஆங்கிலத்தில் ‘மதுராஎன்று சொல்லப்படுவதும், கிரேக்கர்களால் ‘மெதோராஎன்று குறிப்பிடுவதும் இத்தமிழ் மதுரையே யாம்!

சுவர்களில் ஓரடி உயர எழுத்துகளில் விளம்பரங்கள் விதவிதமாக ஒன்றி வாழ்ந்தன. நிஜாம் லேடி புகையிலை – ஆ.கே. கட்பாடிகள் – எச்சரிக்கை! புரட்சித் தீ! சுவிசேஷக் கூட்டங்கள் – ஹாஜி மூசா ஜவுளிக்கடை [கடல்] – 30.9.73 அன்று கடவுளை நம்பாதவர்கள் சுமக்கப் போகும் தீச்சட்டிகள்.

மதுரையின் ஒரு சாதாரண தினம். எப்போதும் போல ‘பைப்அருகே குடங்கள் மனிதர்களுக்காக வரிசைத் தவம் இருந்தன. சின்னப் பையன்கள் ‘டெட்டானஸ்கவலை இன்றி மண்ணில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். பாண்டியன் போக்குவரத்துக் கழக பஸ்கள் தேசியம் கலந்த டீஸல் புகை பரப்பிக் கொண்டிருந்தன. விரைப்பான கால் சராய் சட்டை அணிந்த, ப்ரோடீன் போதா போலீஸ்கார்ர்கள் ‘இங்கிட்டும் அங்கிட்டும்செல்லும் வாகன – மானிட போக்குவரத்தைக் கட்டுப் படுத்திக் கொண்டிருந்தார்கள். நகரின் மனித இயக்கம் ஒருவிதப் ப்ரௌனியன் இயக்கம் போல் இருந்த்து. [பௌதிகம் தெரிந்தவர்களைக் கேட்கவும்] கடர் சட்டை அணிந்த, மெல்லிய, அதிக நீளமில்லாத ஊர்வலம் ஒன்று, சாலையில் இடது புறத்தில் அரசாங்கத்தை விலைவாசி உயர்வுக்காகத் திட்டிக் கொண்டே ஊர்ந்தது. செருப்பில்லாத டப்பாக்கட்டு ஜனங்கள், மீனாட்சி கோயிலின் ஸ்தம்பித்த கோபுரங்கள், வற்றிய வைகைப் பாலம்.... மதுரை!

இப்படித்தான் சுவாரசியமாக ஆரம்பிக்கிறது தலைவரின் நகரம் சிறுகதை. இச்சிறுகதை இன்றைக்கு முப்பத்தி எட்டு - நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டது. ஊர் பற்றிய ஒரு கண்ணோட்டத்தினை முதல் மூன்று நான்கு பத்திகளிலேயே தரும் இந்த வித்தை வாத்தியாரிடம் இருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும். 
 
இச் சிறுகதையை சமீபத்தில் படித்தேன். தில்லி தமிழ்ச் சங்கத்தின் நூலகத்திலிருந்து எடுத்த புத்தகங்களுள் “நகரம் – சுஜாதாஎன்ற தலைப்பிட்ட புத்தகமும் அடக்கம். இத் தொகுப்பில் மொத்தம் 14 கதைகள். முன்னுரையில் இந்த பதினான்கு கதைகளும் சென்ற இரு வருடங்களில் தினமணி கதிர், கலைமகள், கல்கி, சுதேசமித்திரன், குமுதம் பத்திரிகைகளில் வெளிவந்தவை என்று சுஜாதாவே 04.03.74 அன்று சொல்லி இருக்கிறார்!


இத்தொகுப்பில் இருக்கும் பதினான்கு கதைகள் – [1] நகரம் [2] பார்வை [3] சென்றவாரம் [4] கள்ளுண்ணாமை [5] தலைப்பு என்ன? [6] மகன் தந்தைக்கு [7] உறுமீன் [8] இளநீர் [9] காணிக்கை [10] முரண் [11] காரணம் [12] அகப்பட்டுக் கொள்ளாதவரை திருடன் அல்ல [13] ஒரே ஒரு வரம் [14] வாட்டர் கார் விவகாரம்.

அனைத்து கதைகளுமே எனக்குப் பிடித்தது. இதில் சென்றவாரம் கதை – தினமணி நாளிதழில் 28.12.73 அன்று வெளிவந்த ஒரு விபத்துச் செய்தியை வைத்து ஒரு கதையை அழகாய் பின்னியிருப்பார். 

ஒரே ஒரு வரம் – ஆசாமியிடம் வித்தியாசமாக என்னவோ இருந்தது. என்ன என்று சுலபமாகச் சொல்ல முடியவில்லை. சட்டை பட்டன் ஒன்றை மாற்றிப் போட்டிருந்தாரே, அதுவா? இந்த 1973-ல் காதில் கடுக்கன் போல் போட்டுக் கொண்டிருந்தாரே, அதுவா? அல்லது வலது கை சுட்டு விரலில் மோதிரம்? குடுமியா, கிராப்பா என்று சொல்ல முடியாத சிகை, நிச்சயம் அவர் சென்னைக்குப் புதிது... சீனிவாசலு நாயுடு தெரு, இரண்டாம் சந்து.....

கதவு எண்களைப் பார்த்துக்கொண்டே ஒரு வீட்டு வாசலில் நின்றார். அதன் முகப்பில் தெரிந்த மாடிப் படிகளில் ஏறி ஒரு தண்ணீர் டிரம்மைத் தாண்டி ஓர் அறையின் வாசற் கதவை லேசாகத் தட்டினார். பதிலில்லை. சுற்று முற்றும் பார்த்தார். ஒருவருமில்லை. உடனே அவர் ஒரு அமானுஷ்யமான காரியம் செய்தார். மூடி இருந்த அந்த அறைக் கதவின் ஊடே, புகை போல் ஊடுருவி உள்ளே சென்றார்.

உள்ளே சென்று பார்த்தால் ஒரு பெண், தற்கொலைக்கு முயற்சிக்கிறாள். அவளைத் தடுத்து அவளுக்கு ஒரே ஒரு வரம் அளிக்கிறார். அந்த வரம் அளித்த பிறகு தனது வேலையை ராஜினாமா செய்ய நினைக்கிறார் - காரணத்தை மிக அழகாய்ச் சொல்லி இருக்கிறார் “ஒரே ஒரு வரம்என்ற இக்கதையில்.

அனைத்து கதைகளுமே அருமை.  நான் படித்த புத்தகம் குமரி பதிப்பகம் 1974-ல் வெளியிட்டது. வெளி வந்த கதைகளில் சிலவற்றை இணையத்தில் படிக்கலாம். நகரம் கதை சுஜாதாவின் தீவிர ரசிகர் திரு. பால் ஹனுமானின் தளத்தில்இருக்கிறது.

மீண்டும் வேறொரு படித்ததில் பிடித்ததுபகிர்வில் சந்திக்கும் வரை...

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


 

மாற்றுத் திறனாளிகள்

0
0


இன்று [03.12.2012] உலக மாற்றுத் திறனாளிகள் தினம். ஐக்கிய நாடுகள் சார்பாக, 1992 ஆம் வருடத்திலிருந்து இன்றைய தினத்தினை உலக மாற்றுத் திறனாளிகள் தினமாக அறிவித்து, ஒவ்வொரு வருடமும் ஒரு கருப்பொருளை மையமாகக் கொண்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறார்கள். 

இன்றைய தினம் சில திறமையான மாற்றுத் திறனாளிகளின் திறமையைப் பறைசாற்றும் புகைப்படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உடலளவில் இவர்களுக்குக் குறை இருந்தாலும், உள்ளத்தில் பல குறைகளைக் கொண்டவர்களை விட இவர்கள் எவ்வளவோ மேல்.








இம்மாதிரி மாற்றுத் திறனாளிகள் பற்றிய சிறப்பான பாடலையும் இந்நேரத்தில் நினைவு கூர்ந்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.





மீண்டும் வேறொரு பகிர்வில் உங்களைச் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

 
Viewing all 2964 articles
Browse latest View live